22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடம்

பிரித்தானியாவில் 4 வயது சிறுமியால் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிப்பு

by Bella Dalima 30-01-2021 | 4:48 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் 4 வயது சிறுமியால் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிப்பு பிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் காற்தடத்தை 4 வயது சிறுமியொருவர் கண்டு தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார். சுமார் 22 கோடி ஆண்டுகள் பழமையான இந்த கால்தடம் இவ்வளவு காலம் ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகவுள்ளது. 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால் தடமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும், எந்த வகையான டைனோசர் என அவர்களால் கணிக்க முடியவில்லை. சிறுமி லில்லியும் அவரது தந்தை ரிச்சர்ட்டும் கடற்கரையோரம் நடந்து செல்கையில், லில்லி இந்த கால் தடத்தைக் கண்டு ரிச்சர்ட்டிற்கு காண்பித்துள்ளார். அவர் அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு காண்பித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவி அதனை நிபுணர்களுக்கு அறிவித்துள்ளார். டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த கால் தடம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். "இதுவரை இந்த கடற்கரையில் கிடைத்த கால் தடங்களிலேயே இந்த கால் தடம் தான் மிகவும் சிறந்தது" என வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின், வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆராயும் அறிஞர் சிண்டி ஹோவெல்ஸ் கூறியுள்ளார். டைனோசரின் காலடித் தடத்தை சிறப்பாக பராமரித்தால், விஞ்ஞானிகள் டைனோசரின் காலின் உண்மையான வடிவத்தை நிறுவ அது உதவும் என வேல்ஸ் தேசிய அருங்காட்சியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.