பொடி லெசி மீது குற்றப்பத்திரிகை: CID நடவடிக்கை

பொடி லெசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய CID நடவடிக்கை

by Bella Dalima 29-01-2021 | 3:08 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரான பொடி லெசி என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுஷங்க தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்த வழக்கு விசாரணை காலி பிரதம நீதவான் ஹர்ஷக கெக்குனுவெல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கையை சட்ட மா அதிபருக்கு கையளித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றில் இன்று குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதின்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது. பூசா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர், தமக்கான இட வசதி போதுமானதாக இல்லை என தெரிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த வேளையில், அது தொடர்பில் ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட சிலர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி பூசா சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இதன்போது, கொஸ்கொட தாரக்க என அழைக்கப்படும் தர்மகீர்த்தி தாரக்க பெரேரா விஜேசேகரவும், பொடி லெசியும் இணைந்து ஜனாதிபதியின் பாதுகாப்பு செயலாளருக்கும் சிறைச்சாலையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி பொடி லெசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், மேலதிக விசாரணகளுக்காக சந்தேகநபரை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.