120 பாடசாலைகளில் சுகாதார அறைகள் அமைக்கப்படவுள்ளன

நாட்டின் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைக்க அமெரிக்கா உதவி

by Staff Writer 29-01-2021 | 4:18 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்கமைவாக, நாடளாவிய ரீதியில் 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைப்பதற்கு அமெரிக்க அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலய, மாகாண மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கமைவாக அமைக்கப்படவுள்ள சுகாதார அறைகளில் படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்பு திரைகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகள் என்பன உள்ளடக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்படும் சுகாதார அறைகளினூடாக மாணவர்களின் ஆரோக்கியம் மேலும் பேணப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டத்திற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு 06 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது.