வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசின் அனுசரணை

பொருளாதார பிரச்சினைகளால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அரச அனுசரணையும் அழைத்துவரப்படவுள்ளனர்

by Bella Dalima 29-01-2021 | 3:44 PM
Colombo (News 1st) பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அரச அனுசரணையுடன் நாட்டிற்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, விமான பயணச்சீட்டுக் கட்டணத்தில் 50 வீதத்தை அரச தரப்பில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரால் துறைசார் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர, சலுகைக் கட்டண அடிப்படையில் அவர்களுக்கான விமான பயணச்சீட்டுகளை விநியோகிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்படும் இலங்கையர்களை தனிமைப்படுத்தும் கால வரையறை மீதான பரிசீலனை தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். PCR பரிசோதனைகளுக்கமைவாக கொரோனா தொற்று இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரிவினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் பிரதமரினால் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 22,483 இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.