வடக்கின் குடிநீர் பிரச்சினையில் 60 வீதத்திற்கு தீர்வு வழங்க முடியும்: பேராசிரியர் சுப்ரமணியம் சிவகுமார்

by Staff Writer 28-01-2021 | 8:20 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் காணப்படும் நீர் நிலைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்தால் மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு வழங்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வட மாகாணத்தில் போதுமான நீர் வளம் இருந்தாலும் மக்கள் தொடர்ந்தும் குடிநீர் மற்றும் விவசாயம் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வட மாகாணத்தில் 23 ஆறுகளும் 56 குளங்களும் உள்ளன. மாகாணத்தின் வருடத்தின் சராசரி மழைவீழ்ச்சி 130 சென்டிமீட்டராக காணப்படுவதுடன், குறிப்பிடத்தக்க மூன்று மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. வட மாகாணத்தின் நீர் வளம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் சுப்ரமணியம் சிவகுமார் நீண்ட காலம் ஆய்வு செய்து சில நீரியல் கொள்கைகளை வௌியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது,
குளங்களின் நீரில் 60 வீதத்தை மாத்திரமே விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். 100 வீதத்தையும் பயன்படுத்தக் கூடாது. அத்துடன், 10 வீத நீர் எப்போதும் எம்மிடம் சேமிப்பில் இருக்க வேண்டும். இதன் மூலம் மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையில் 60 வீதத்திற்கு தீர்வு வழங்க முடியும். இதனை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும். நீர் இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பதில் பலன் இல்லை. இது தொடர்பில் மாகாண பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் இணைந்து திட்டம் ஒன்றை வகுத்தால் இதற்கு தீர்வு பெற முடியும்.