தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாட்டை வந்தடைந்தது 

by Staff Writer 28-01-2021 | 11:43 AM
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று (28) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகள், ஏ.ஐ 281 எனும் குளிரூட்டல் வசதிகளை கொண்ட இந்திய விமானம் மூலம் மும்பையிலிருந்து கட்டுநாயக்கவிற்கு கொண்டு வரப்பட்டது. தடுப்பூசிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டன. இன்று கொண்டுவரப்பட்ட 250,000 பேருக்கு வழங்கக்கூடிய தடுப்பூசிகளின் நிறை 1,323 கிலோகிராம் ஆகும். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து, குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டன.