1,000 ரூபா சம்பள விவகாரம்: பெப்ரவரியில் கூடுகின்றது சம்பள நிர்ணய சபை

by Staff Writer 27-01-2021 | 8:56 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக சம்பள கட்டுப்பாட்டு சபை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூடவுள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தினால் தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்றுறையுடன் தொடர்புடைய சம்பள நிர்ணய சபையை பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கூட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அமைச்சரவையின் தீர்மானத்தை சம்பள நிர்ணய சபையிடம் சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை பெற்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பெப்ரவரி மாதமளவில் சம்பள நிர்ணய சபையை கூட்டி இந்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என நான் எதிர்பார்ப்பதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையை கூட்டவுள்ளதாக தெரிவித்திருந்தார்.