நெடுங்கேணி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உள்ளிட்ட மூவர் விடுதலை

by Staff Writer 27-01-2021 | 8:26 PM
Colombo (News 1st) வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் விடுவிக்க வவுனியா நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. தொல்பொருட்களை சேதப்படுத்தியமை தொடர்பிலான வழக்கு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடந்த 22 ஆம் திகதி பூசகர் மற்றும் பரிபாலன சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதுவொரு வழிபாடு சுதந்திரம் சம்பந்தமான விடயம். ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடமாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருந்தால் அங்கே வழிபடுகிறவர்கள் போவதற்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. இல்லை என்றால் எவரும் ருவன்வெலிசாயாவுக்கு போக முடியாது. ஸ்ரீமாபோதிக்கு போக முடியாது, பொலன்னறுவையில் இருக்கின்ற எந்த புராதான இடங்களிற்கும் போக முடியாது. வழிபட முடியாது. புராதன இடமாக இருந்தாலும் கூட அது வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற சமர்ப்பணத்தை செய்திருந்தேன். அடிப்படை உரிமையை தடுக்கிறதான இந்த செயற்பாட்டிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்த கிழமை தயாரான நிலையில், இந்த வழக்கு விடயங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அது தாமதமாகியிருப்பதாக நீதிமன்றத்திலே நான் சொல்லியிருக்கிறேன்
என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொய்யான வழக்குகளை தாக்கல் செய்து நிர்வாக சபையினர் மூவரை கைது செய்து அவர்களை நிரந்தரமாகவே அவர்களுடைய எதிர்காலத்தை அழிக்கின்ற வகையில் சிறைகளில் தள்ளுவதற்கு முயற்சி செய்திருந்தார்கள். ஆனாலும், இன்றைய தினம் முயற்சி முறியடிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்
என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.