சசிகலா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து சசிகலா விடுதலை

by Staff Writer 27-01-2021 | 12:32 PM
Colombo (News 1st) சொத்துக்குவிப்பு வழக்கில் 04 வருட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த V.K. சசிகலா, தண்டனைக்காலம் நிறைவடைந்து விடுதலையாகியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்த 20 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்றைய தினம் (27) அவரது தண்டனைக்காலம் நிறைவடைந்துள்ளதால், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் விடுதலையாகியுள்ளார். சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிடம், வைத்தியர்களின் உதவியுடன் பொலிஸ் அதிகாரிகள் கையொப்பம் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து அவர் விடுதலையானதற்கான ஆவணங்களை சிறைத்துறையினர் சசிகலாவிடம் கையளித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்தும் குறித்த வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறவுள்ள சசிகலா அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகம் திரும்புவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான அவரின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாக சிகிச்சை பெற்றுவரும் வைத்தியாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிலில் எழுந்து அமர்வதாகவும் உணவு உட்கொள்வதாகவும் ஊன்றுகோல்களின் உதவியுடன் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.