தடுப்பூசி வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை?

தடுப்பூசி வழங்குவதில் யாருக்கு முன்னுரிமை?

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 1:54 pm

Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

தடுப்பூசிகள் நாளை (28) கிடைத்தவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுகாதார அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் (29) முதல் வழங்கப்படவுள்ள தடுப்பூசிகள், கொரோனா ஒழிப்பிற்காக முன்நின்று செயற்படும் சுகாதாரத் துறையினர், முப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கு முதலில் வழங்கப்படவுள்ளதாக லலித் வீரதுங்க இதன்போது கூறியுள்ளார்.

Sinopharm நிறுவனத்தில் தயாரிக்கப்படும் 3 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தொடர்பிலும், ஜனாதிபதியினால் ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேநேரம் இது குறித்து எதிர்வரும் நாட்களில், பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, நாட்டிற்கு தேவைப்படுகின்ற 3 மில்லியன் மருந்துகளை சீரம் நிறுவனத்திடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

குறித்த தடுப்பூசிகளுக்கு 6 மாத காலம் வரை ஆயுட்காலம் காணப்படுவதால் தொகையாக கொண்டு வந்து நாட்டில் களஞ்சியப்படுத்த வேண்டிய தேவையில்லை என ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க இதன்போது கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்