தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் 

by Staff Writer 26-01-2021 | 12:57 PM
Colombo (News 1st) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மிக பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக, பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள லயன் அறைகளை அகற்றி அதே இடத்தில் புதிய வீடுகளை அமைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வௌ்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் ஆபத்துகள் இருப்பின் லயன் அறைகள் அமைந்திருக்கும் இடங்களில் இட வசதிகள் போதுமானளவு இல்லாவிட்டால் வேறு இடங்களில் வீடமைப்பை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிற்காலத்தில் குறித்த வீடுகளை இருமாடி வீடுகளாக நிர்மாணிக்கக்கூடிய வகையில் 550 சதுர அடிகளை கொண்ட வீட்டின் முதலாம் கட்டத்தை 1.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்திற்காக மேலதிகமாக 03 பேச்சர்ஸ் காணியை ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் ஒதுக்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வீடமைப்பின் பெறுமதியில் 50 வீதத்தை பயனாளிகளிடமிருந்து மீள அறவிடுவதற்கும் அதற்காக 20 வருட கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லயன் வீடுகள் அமைந்துள்ள இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வரை, வேறு இடத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஏனைய செய்திகள்