by Staff Writer 26-01-2021 | 7:29 AM
Colombo (News 1st) இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்றாகும் (26).
குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள விஜய்சோ பகுதியைச் சுற்றிலுமுள்ள 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டில்லியில் உள்ள முக்கியமான மின்பகிர்மான நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லியில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சத்தால் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் எவரும் பங்கேற்காமல் இந்தியாவில் இம்முறை குடியரசு தின விழா கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தெற்காசியாவில் உள்ள ஒரேயொரு குடியரசு நாடான இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்ட இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபை தலைவராக டொக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார்.
அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் என கருதி, டொக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
மக்களாட்சியை குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.
“மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என கருதி உருவாக்கப்பட்டதே இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.
இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய மூவண்ண கொடியை ஏற்றி இந்த குடியரசு தின கொண்டாட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும் வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.