இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி 

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி 

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி 

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2021 | 6:20 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதனையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2 – 0 என இங்கிலாந்து வசமானது.

இலங்கை அணி நிர்ணயித்த 164 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்தின் ஆரம்ப விக்கெட்கள் சீரான இடைவௌியில் வீழ்த்தப்பட்டன.

அணி 17 ஓட்டங்களைப் பெற்றபோது முதல் விக்கெட்டாக ஸக் குரோலி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் 62 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டும் 84 ஓட்டங்களுக்கு மூன்றாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டன.

கடந்த இனிங்ஸ்களில் சிறப்பாக ஓட்டங்களைக் குவித்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 89 ஆக இருக்கையில் டான் லோரன்ஸும் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து போட்டி சற்று விறுவிறுப்படைந்தது.

எனினும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டொம் ஷிப்லியும் ஜொஸ் பட்லரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

டொம் ஷிப்லி மூன்றாவது அரைச்சதத்தைக் கடந்து 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

ஜொஸ் பட்லர் 48 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்களுடன், ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

காலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி 04 நாட்களில் முடிவுக்கு வந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இனிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது.

அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜேம்ஸ் அன்டர்ஸன் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அதன் முதல் இனிங்ஸில் 344 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்களைப் பெற்றார்.

லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

37 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை மிக மோசமாக துடுப்பெடுத்தாடியது.

லசித் எம்புல்தெனிய மாத்திரம் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏனைய வீரர்கள் 20 இற்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கையில் இரண்டாம் இனிங்ஸ் 126 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

டொம் பெஸ் மற்றும் ஜக் லீச் தலா 4 விக்கெட்களையும் ஜோ ரூட் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியினதும் தொடரினதும் நாயகனாக இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.

முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து 07 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்து.

04 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 05 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றது.

தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்