SLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து

SL v ENG 2nd Test: முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து

by Staff Writer 24-01-2021 | 7:53 PM
Colombo (News 1st) இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களை பெற்றுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி ஆரம்பித்தது. இங்கிலாந்து அணியின் இன்றைய முதல் விக்கெட்டாக Jonny Bairstow 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் ஜோ ரூட் உடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் தனது நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் ஜோ ரூட், 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், இன்றைய நாளில் வீசப்பட்ட கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஒரு இன்னிங்ஸில் அதிக பிடிகளை எடுத்த வீரர்கள் வரிசையில் இலங்கை அணியின் லஹிரு திரிமான்னவும் இன்று இணைந்தார். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் அவர் ஐவரை பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 381 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதற்கமைய, மேலும் ஒரு விக்கெட் கைவசமிருக்க, இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது. இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்யூஸ் சதம் பெற்றிருந்தார்.