MV Eurosun கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

விபத்திற்குள்ளான MV Eurosun கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தகவல்

by Staff Writer 24-01-2021 | 3:46 PM
Colombo (News 1st) திருகோணமலை நோக்கி பயணித்த போது விபத்திற்குள்ளான கப்பலில் எவ்வித எண்ணெய் கசிவுகளும் ஏற்படவில்லை என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை (Marine Environment Protection Authority) தெரிவித்துள்ளது. ஏதேனும், அவசரத் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் செயற்படுவதற்கு அனைத்து தரப்பினரும் தயாராகவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப்குமார குறிப்பிட்டார். அபுதாபியிலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றிச்சென்ற கப்பலொன்று நேற்று (23) முற்பகல் விபத்திற்குள்ளானது. ஹம்பாந்தோட்டை - இராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடல் பரப்பில் கற்பாறையில் மோதி கப்பல் விபத்திற்குள்ளாகியுள்ளது. லைபீரிய நாட்டிற்கு சொந்தமான MV Eurosun என்ற கப்பலே திருகோணமலை துறைமுகத்தை நோக்கி பயணித்த போது விபத்திற்குள்ளாகியுள்ளது. 108 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பலில் 18 பேர் உள்ளதாகவும் கப்பலை கண்காணிப்பதற்காக Beechcraft 200 ரக இலகு விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.