சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மேல் மாகாணத்தில் நாளை பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன

by Staff Writer 24-01-2021 | 2:26 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை (25) திறக்கப்படவுள்ளன. சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மேல் மாகாணத்தில் நாளை பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேல் மாகாணத்திற்குள் தூர பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், தங்களின் வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று தங்களின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். கா.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் வரை தமது பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஒப்புதலுடன், அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என அவர் கூறினார். மாணவர்களுக்கான பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நிலவும் கொரோனா தொற்று சவாலுக்கு மத்தியில் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படும் பட்சத்தில், மேல் மாகாணத்திலுள்ள ஏனைய மாணவர்களுக்காகவும் கற்றல் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.