மாணவர்களை இணைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் மாற்றமில்லை

by Bella Dalima 23-01-2021 | 3:31 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகளுக்கு அமைய பாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், 2017 முதல் 2021 ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அத்துடன், வகுப்புகளின் எண்ணிக்கை அல்லது வகுப்பொன்றில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், தரம் ஒன்று முதல் தரம் 13 வரையிலான ஆடவர், மகளிர், கலவன் பாடசாலைகளிலும், தரம் 6 முதல் தரம் 13 வரையிலான ஆடவர், மகளிர், கலவன் பாடசாலைகளிலும் அவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்க்கவில்லை எனவும் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.