இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினையை ஆராய குழு நியமனம்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

by Bella Dalima 23-01-2021 | 4:32 PM
Colombo (News 1st) இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள், கரையோர காவற்படையினர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வுக்குரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் அழிக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி இலங்கை மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எல்லை தாண்டும் மீனவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சம்பவத்தில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், எல்லை தாண்டிய அத்துமீறல்களை மீனவர்கள் நிரந்தரமாக நிறுத்துவதற்குரிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கி கடற்றொழில் அமைச்சினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.