மீனவர்கள் உயிரிழப்பு: இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து இந்திய மத்திய அரசு கண்டனம்

by Staff Writer 22-01-2021 | 7:05 PM
UPDATE: நீரில் மூழ்கியமையாலேயே இந்திய மீனவர்கள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர், சடலங்களை தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார். -------------------------------------------------------------------------------- Colombo (News 1st)  COVID-19 தடுப்பூசி இந்தியாவிலிருந்து எப்போது கிடைக்கும் எனும் விவாத நிலைக்கு மத்தியில், மீனவர்களின் பிரச்சினை எழுந்துள்ளது. இந்திய மீனவர்கள் படகொன்று இலங்கை கடற்படைப் படகின் மீது மோதியதால் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலை எழுந்துள்ளது. இந்திய மீனவர்களின் நான்கு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், காங்கேசன்துறை பொலிஸாரின் அனுமதி கிடைத்தவுடன் வடக்கு கடற்பரப்பில் மீட்கப்பட்ட இந்திய மீனவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனிடையே, இந்திய மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியாவிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து மத்திய அரசு கண்டனம் வௌியிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மீனவர்களின் உயிரிழப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்திய வௌியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் வேண்டுமென்றே எல்லை தாண்டி செல்வதில்லை என தெரிவித்துள்ள ஜெயக்குமார் காற்றின் வேகம் , மீன்களின் ஓட்டத்தினைக் கொண்டே மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் கூறியுள்ளார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மீனவர்களை பிடித்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர துன்புறுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும் மத்திய அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மீனவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழக முதல்வர் கூறியுள்ளார். இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவ குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியின் ஊடாக தலா 10 இலட்சம் இந்திய ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை (23) கச்சதீவிற்கு குடும்பங்களாக படகுகளில் பயணித்து அங்கு மீன் பிடிப்பதற்கான தமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டப் போவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். போராட்டங்களை நடத்துவதற்கான உரிமை தமிழக மீனவர்களுக்கு இருந்தாலும், இலங்கை கடற்படையினர் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பார்கள் என இந்திக டி சில்வா குறிப்பிட்டார். தமிழகத்தின் கோட்டைப்பட்டிணத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட படகு ஒன்றே நெடுந்தீவிற்கு வடமேற்குப் பகுதியில் விபத்திற்குள்ளானது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் படகை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்வதற்கு முனைந்தபோது குறித்த படகு கவிழ்ந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டிணத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சி மடத்தை சேர்ந்த 30 வயதான ஏ.மெசியா, வட்டவாளத்தை சேர்ந்த 52 வயதான வி.நாகராஜ் , மண்டபத்தை சேர்ந்த 28 வயதான என்.சாம்சன் மற்றும் உச்சிபுளியைச் சேர்ந்த 32 வயதான எஸ்.செந்தில் குமார் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்களில் சாம்சன் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.