இலங்கையில் COVID-19 தடுப்பூசியின் பரீட்சார்த்த நடவடிக்கை நாளை

by Staff Writer 22-01-2021 | 9:03 PM
Colombo (News 1st) இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca என்றழைக்கப்படும் Covishield தடுப்பூசியை இலங்கைக்கும் வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது அறிவித்திருந்தார். வலய நாடுகள் சிலவற்றுக்கு அந்தத் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு இதுவரை தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்த நிலையில், இலங்கையின் அவசரகால தேவைக்காக Oxford-Astrazeneca தடுப்பூசியைப் பயன்படுத்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி, தற்போது மாலைத்தீவு, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு தற்போது கிடைத்துள்ளன. இலங்கை அதற்கான ஒழுங்குபடுத்தல் அனுமதியை பெறாமையினால், தடுப்பூசியை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக இந்தியா இதற்கு முன்னர் கூறியிருந்தது. இந்த நிலையில், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக Serum நிறுவனத்தினால் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு வழங்கிய விண்ணப்பத்திற்கு அமைய, தடுப்பூசியை பயன்படுத்த இன்று அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, COVID-19 தடுப்பூசி பரீட்சார்த்தமாக நாளை (23) ஏற்றப்படவுள்ளது. பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்தியாவிடமிருந்து தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான மேலதிக தௌிவுபடுத்தலை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரியுள்ளதாக , சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி , அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். சீனாவின் ஆதிக்கத்தை பின்தள்ளி, வலய நாடுகளின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியாவின் தடுப்பூசி கொள்கை காணப்படுவதாக Al-jazeera செய்தி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் மில்லியன் கணக்கான COVID-19 தடுப்பூசிகளை தெற்காசிய நாடுகளுக்கு விநியோகிக்க இந்தியா தயாராகியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஒரே நோக்கு ஒரே பாதை கொள்கையின் கீழ் இலங்கை, நேபாளம் , மாலைத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் துறைமுகங்கள், பெருந்தெருக்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க சீனாவினால் முன்னெடுக்கப்படும் பாரிய முதலீடுகளுடன் போட்டியிட முடியாத இந்தியா, பல வருடங்களாக பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்ததாகவும் Al-jazeera செய்தி வௌியிட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழிலுடன் கூடிய பொருளாதாரத்தை கொண்டுள்ள வலய நாடுகளின் COVID-19 தடுப்பூசிக்கான கேள்விக்கு மத்தியில், சீனாவின் ஆதிக்கத்தை பின்தள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அரசிற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.