இந்திய மீனவர்களின் உயிரிழப்பு வேதனையளிக்கிறது

இந்திய மீனவர்கள் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை வேதனையளிப்பதாக டக்ளஸ் தேவானந்தா அறிக்கை

by Staff Writer 22-01-2021 | 2:56 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி காணாமற்போன இந்திய மீனவர்கள் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரதும் உறவினர்களினதும் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் அறிக்கை ஒன்றினூடாகக் கூறியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு, இலங்கை கடற்றொழிலாளர்களும் இந்திய கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில், இரண்டு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் வகையிலான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கான திட்ட வரைபொன்றை கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமரிடம் தாம் கையளித்ததாகவும் கடற்றொழில் அமைச்சர் கூறியுள்ளார். எனினும், துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட COVID-19 காரணமாக அதனை முன்கொண்டு செல்ல முடியவில்லை என கடற்றொழில் அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். துன்பங்களை சுமந்த போதெல்லாம் உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள், தமிழர்களுக்காக துடிப்பதற்கு பாரத தேசம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறானவர்களுக்கு இன்னல் ஏற்படுவதை எவ்வாறான சூழலிலும் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் நோக்கில், உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அறிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்