மயிலத்தமடு மேய்ச்சல் தரை வழக்கு: பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை வழக்கு: பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2021 | 5:48 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு நிறைவடையும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி M.N.அப்துல்லா தலைமையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளும் மேய்ச்சல் தரையில் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அத்துடன், மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கூடாது எனவும் கோரப்பட்ட நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சட்டத்தரணி இணக்கம் தெரிவித்துள்ளார்.

வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில், தற்போதைய நடைமுறைகளுக்கு அமைய காணியை பேணுமாறும் வேறு எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்