மேல் மாகாண பாடசாலைகள் பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமா?

by Staff Writer 21-01-2021 | 7:48 AM
Colombo (News 1st) சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான இயலுமை குறித்து நேற்று (20) கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு , கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டதாக அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டல்களின் கீழ், எந்தெந்த பாடசாலைகளை மீள திறக்க முடியும் என்பது தொடர்பில் பரிந்துரைக்குமாறு அதிபர்களை கேட்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி எந்தெந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு கோரப்படவுள்ளது. இந்த பரிந்துரைகளை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 15 திகதியளவில் எந்தெந்த பாடசாலைகளை திறக்க முடியும் என்பதற்கான அனுமதி வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.