COVID தடுப்பூசி இலங்கைக்கு ஏன் கிடைக்கவில்லை?

இந்தியாவின் COVID தடுப்பூசி இலங்கைக்கு ஏன் கிடைக்கவில்லை?

by Bella Dalima 21-01-2021 | 9:12 PM
Colombo (News 1st) இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு COVID தடுப்பூசியை வழங்குவதற்கான உறுதியான திகதி தெரிவிக்கப்படவில்லை என அதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது. Oxford-AstraZeneca நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்ட Covishield தடுப்பூசியை இந்தியாவின் பாரிய நிறுவனமான Serum Institute உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிரதிநிதியாக செயற்படுவதற்கு தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனம் அனுமதி கோரினாலும் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. Serum நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக செயற்படுவதற்கு தனியார் நிறுவனத்துடனும் கூட்டுத்தாபனம் கலந்துரையாடியதாக தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் K.M.D.R. திசாநாயக்க குறிப்பிட்டார். இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அவசர அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன், அத்தகைய அனுமதியை பெறுவதற்கு அரசாங்கத்தின் பரிந்துரையும் தேவைப்படுகிறது. எனினும், தனியார் நிறுனமொன்றுக்கு இதற்கான பரிந்துரையை வழங்க முடியாது என்பதால், தேசிய ஔடதங்கள் கூட்டுத்தாபனம், அதில் தலையீடு செய்து, இந்தியாவின் Serum நிறுவனத்தின் பிரதிநிதியாக செயற்பட அனுமதி கோரியுள்ளது. எனினும், தமது தடுப்பூசியை இலங்கையில் பதிவு செய்வது தொடர்பில் , பிரதிநிதி நிறுவனத்தை தவிர்த்து, இராஜதந்திர பொறிமுறையினூடாக செயற்படவுள்ளதாக Serum நிறுவனம் இந்த கோரிக்கைக்கு பதில் வழங்கியுள்ளது. அதற்கமைய, நேற்று முன்தினம் பகல், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக Covishield தடுப்பூசி தொடர்பான ஆவணங்களை இலங்கை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரித்தானியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீஷெல்ஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு தற்போது Covishield தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இலங்கையில் AstraZeneca தடுப்பூசிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாமையால், இந்தியாவிலிருந்து அவற்றை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்திருந்தது.