தமிழக மீனவர்கள் நால்வரின் சடலங்களும் இலங்கையின் வடக்கு கடற்பரப்பிலிருந்து மீட்பு

தமிழக மீனவர்கள் நால்வரின் சடலங்களும் இலங்கையின் வடக்கு கடற்பரப்பிலிருந்து மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jan, 2021 | 8:10 pm

Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகு விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

படகு விபத்திற்குள்ளான பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான படகில் 4 பேர் பயணித்திருந்ததாக இந்திய அதிகாரிகள் தங்களுக்கு அறிவித்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

நேற்று (20) இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதுடன் இன்று காலை மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டதாகவும் முற்பகல் நான்காவது சடலமும் மீட்கப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தின் கோட்டைப்பட்டிணத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக புறப்பட்டிருந்த படகு ஒன்றே நெடுந்தீவிற்கு வட மேற்கே விபத்திற்குள்ளானது.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் படகை ஆக்ரோஷமாக மோதித் தள்விட்டு தப்பிச்செல்ல முனைந்த போது குறித்த படகு கவிழ்ந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.

சம்பவத்தை அடுத்து காணாமற்போன மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையின் விசேட பிரிவினரும் இந்திய மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டிணத்திலிருந்து கடந்த 18 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சி மடத்தை சேர்ந்த 30 வயதான ஏ.மெசியா, வட்டவாளத்தை சேர்ந்த 52 வயதான வி.நாகராஜ் , மண்டபத்தை சேர்ந்த 28 வயதான என். சாம் மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த 32 வயதான எஸ்.செந்தில் குமார் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதில் சாம் என்பவர் 2009 ஆம் ஆண்டு இல்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தங்கச்சி மடம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மீனவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வந்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

500-இற்கும் மேற்பட்ட மீனவர்கள் சாத்வீக முறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு மீனவர்களையும் மீட்டு இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அறந்தாங்கி ஆட்சியர் மீனவர்களிடம் பேசியதைத் தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியலை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

இதேவேளை, ராமேஸ்வரம் மீனவர்கள் தமது விசைப் படகுகளில் கறுப்புக்கொடி கட்டி தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கடற்படைப் பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

போராட்டங்களை நடத்துவதற்கான உரிமை தமிழக மீனவர்களுக்கு இருந்தாலும், இலங்கை கடற்படையினர் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் கூறினார்.

இதேவேளை, வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் தமது வலைகளை அறுத்தெறிந்துள்ளதாக பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கடலில் இருந்து மீட்கப்பட்ட எஞ்சிய வலைகளை இன்று மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்