செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் விடுவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் விடுவிப்பு

by Staff Writer 20-01-2021 | 6:03 PM
Colombo (News 1st) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 10 பேரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட 7 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய சஹரான் ஹாசிம் உள்ளிட்ட அடிப்படைவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிக்கையை வெல்லம்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விடயங்களை தௌிவுபடுத்தியுள்ளனர். இந்த விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்தேகநபர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளார். வெல்லம்பிட்டி - அவிசாவளை வீதியில் அமைந்துள்ள இல்ஹாம் அஹமட் என்ற தற்கொலை குண்டுதாரியின் செப்புத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 10 பேர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறுதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதேவேளை, 2019 ஏப்ரல் 21 ஆம் ஆண்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முவாட்டின் தந்தையான அஹமட் லெப்பே அலாவுதீன் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்வரும் 2 ஆம் திகதி சந்தேகநபரை பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார்.