7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2021 | 4:42 pm

Colombo (News 1st) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவி தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் மீள்குடியேற்றத்திற்காக சொந்த இடங்களுக்கு சென்று, தமது பூர்வீக பிரதேசங்களில் தங்களுக்கான கொட்டில்களையோ அல்லது தற்காலிக இருப்பிடங்களையோ அமைத்த பிறகு, அங்கு கல்வி, சுகாதார, வர்த்தக நடவடிக்கைகளில் குறைபாடு இருந்ததினால், அல்லது இருப்பதற்கு ஒழுங்கான வீடுகள் இல்லாத காரணத்தினால், மீள்குடியேறிய இடங்களிலிருந்து தற்காலிகமாக மீண்டும் புத்தளத்திற்கு வந்துள்ளதாக ரிஷாட் பதியுதீன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இவர்கள் மீள்குடியேறிய பிரதேசங்களில் உரிய வசதிகள் கிடைத்தவுடன் மீண்டும் அங்கு செல்வதற்கு விருப்பத்துடன் உள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு ஆர்வத்துடன் இருக்கின்றவர்களின் வாக்குப் பதிவுகளை பலவந்தமாக நீக்கியமை மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கடந்த 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்