ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றம் செல்ல முடியுமா: தீர்மானத்தை அறிவிக்க கால அவகாசம் கோரினார் சபாநாயகர்

by Bella Dalima 19-01-2021 | 8:14 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியுமா என்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றது. 6 மாதங்களின் பின்னரே ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் இழக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறெனில் அவர் ஏன் இன்று பாராளுமன்றத்திற்கு அழைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். ஆங்கில சட்டத்தின் படி நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டனை வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தவறாக சித்தரிக்கிறது என்று நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். சட்டத்திற்குள் காணப்படும் இடைவௌி காரணமாக, நேர்மையான அரசியல்வாதிக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அல்லது அணிக்கும் கோரிக்கைகள் இருப்பின் எழுத்து மூலம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். தீர்மானத்தை அறிவிக்க தமக்கு மூன்று வாரங்கள் கால அவகாசம் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.