தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தலையீடு செய்யும்: கெஹெலிய ரம்புக்வெல்ல

by Bella Dalima 19-01-2021 | 8:57 PM
Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்ட நிறுவனங்கள் சர்வாதிகாரியைப் போன்று செயற்பட முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
ஆயிரம் ரூபா வழங்குவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது மிகவும் சிக்கலான பிரச்சினை. 50 ரூபா கூட அதிகரிக்க முடியாத காலத்தைத் தாண்டி நாங்கள் வந்துள்ளோம். சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்று கொள்கை ரீதியில் நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். இதன் பிரகாரம், அதில் இருந்து நழுவிச்செல்லாமல் அதனை பெற்றுக்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கின்றோம்
என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பிலும் அமைச்சர் கருத்து வௌியிட்டார்.
அரசாங்கத்திற்கு தெரிவித்தாலும் இல்லாவிட்டாலும் எவருக்கும் சர்வாதிகாரமாக செயற்பட முடியாது. ஊழியர்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையிலான உறவு தொடர்பில் ஒப்பந்தத்தில் மிகத் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கின்ற போது, அதனை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியும். எனினும், அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்கின்ற போது அந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்
என கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.