தடுப்புமருந்து கொள்கை தோல்வி - WHO எச்சரிக்கை

தடுப்புமருந்து கொள்கை தோல்வி - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

by Staff Writer 19-01-2021 | 8:00 AM
Colombo (News 1st) முறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் காரணமாக, பேரழிவு தரக்கூடிய நிலையொன்றுக்கு உலகம் முகம்கொடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வறிய நாடுகளிலுள்ள கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தரப்பினர் தடுப்புமருந்தை பெற்றுக்கொள்ளாத போது, செல்வந்த நாடுகளிலுள்ள இளையவர்கள் அதனை முதலில் பெற்றுக்கொள்வது நியாயமற்றது என ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 49 செல்வந்த நாடுகளில், 39 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான தடுப்புமருந்துகள் விநியோகப்பட்டுள்ள நிலையில், வறிய நாடொன்றில் 25 தடுப்புமருந்துகளே வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தமது நாட்டில் கொரோனா தடுப்புமருந்தை உருவாக்கியுள்ளன. இதனைத்தவிர, அமெரிக்க - ஜெர்மனி இணைந்து தயாரித்த Pfizer தடுப்புமருந்து போல, பன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்புமருந்துகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள், தமது பிரஜைகளுக்கு தடுப்புமருந்தை வழங்குவதற்கே முன்னுரிமையளிக்கின்றன. இதேவேளை, கொரோனாவிற்கான பதில் நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சீனா விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. சர்வதேச அவசரகால நிலையை, உலக சுகாதார ஸ்தாபனம் முன்கூட்டியே பிரகடனம் செய்திருக்க வேண்டுமென ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனமான குழுவொன்று தெரிவித்துள்ளது. அத்துடன் பொது சுகாதார நடவடிக்கைகளை சீனா விரைவாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அந்த குழு குற்றஞ்சுமத்தியுள்ளது.