காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு: வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 19-01-2021 | 7:07 PM
Colombo (News 1st) காணி சுவீகரிப்பு செயற்பாடுகளை நிறுத்தக் கோரி வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்கு சொந்தமான 15 ஏக்கர் காணியை கடற்படைக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படவுள்ளதாக வௌியான தகவலுக்கு அமைய மக்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததுடன், கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களை பிரதேச செயலகத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேலணை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இந்த விடயம் தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் வினவியபோது, கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகள் அளவீடு செய்யப்படுகின்றமை வழமையானது எனவும் அரச காணிகளிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது மக்களின் காணிகளை கையகப்படுத்தும் முயற்சி அல்லவெனவும் அவர் கூறினார்.