நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது

எழுத்தாளர் Bella Dalima

19 Jan, 2021 | 3:24 pm

Colombo (News 1st) கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பி, ஜெர்மனியில் சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, மாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை 30 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி. இவர் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது மயங்கி வீழ்ந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்கு சென்றார். அலெக்சியை கொலை செய்வதற்காக, விமான நிலையத்தில் அவர் குடித்த தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் சந்தேகம் வௌியிட்டனர்.

மேலும், ரஷ்யாவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதி, ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தலைநகர் பெர்லினில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.

நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரஷ்யாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஐந்து மாதங்கள் சிகிச்சைக்குப் பின்னர் நவால்னி ஞாயிற்றுக்கிழமை (17) ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு புறப்பட்டார். நாடு திரும்பினால் தான் கைது செய்யப்படலாம் என்று அறிந்திருந்தும், அவர் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மாஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்குள்ள கடவுச்சீட்டு சோதனை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர், 2014-ஆம் ஆண்டு மோசடி குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றபோது, பிணை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ரஷ்ய சிறைத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

ரஷ்யாவில் இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நவால்னி கைது செய்யப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்