சிகரெட்டை களஞ்சியப்படுத்த அரசிற்கு சார்பான ஒருவருக்கு அரச வங்கி கடன் வழங்கியது: அனுரகுமார வௌிக்கொணர்வு

சிகரெட்டை களஞ்சியப்படுத்த அரசிற்கு சார்பான ஒருவருக்கு அரச வங்கி கடன் வழங்கியது: அனுரகுமார வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2021 | 8:39 pm

Colombo (News 1st) சிகரெட்டின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, அவற்றை களஞ்சியப்படுத்த ஏதுவாக அரசாங்கத்திற்கு சார்பான ஒருவருக்கு அரச வங்கி கடன் வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தகவல் ஒன்றை வௌிக்கொணர்ந்தார்.

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி, டி.எஸ். குணசேகர எனும் தனியார் நிறுவனம் இலங்கை வங்கியின் கட்டுவன கிளையில் 31,500 இலட்சம் ரூபா கடன் கோரியுள்ளது. அவரின் மகனான உதித்த குணசேகர, தற்போது புல்மோட்டை கனியவள திணைக்களத்தின் தலைவராக அவர் உள்ளார். சில அமைச்சர்கள் அண்மையில் கொழும்பில் உள்ள அவரின் வீட்டிலேயே தங்கியிருந்தனர். நான் அவர்களின் பெயர்களைக் கூறுவதில்லை. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனுராதபுரம் சென்றால் அவரின் வீட்டிலேயே தங்குகின்றனர். அவர் இலங்கை வங்கியின் கட்டுவன கிளையில் 31,500 இலட்சம் ரூபா கடன் கோரியுள்ளார். கட்டுவன கிளையின் பெறுமதி கூட அந்தளவு இருக்காது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவுள்ளதால், சிகரெட்டை களஞ்சிப்படுத்தி வைப்பதற்காக அந்த கடன் தொகையை வழங்குமாறு கோரியுள்ளார். அத்தொகையை அவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

என அனுரகுமார திசாநாயக்க கூறினார்.

அனுமதி வழங்கும் பொழுது, வட்டி வீதம் AWPR ஒரு வீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வங்கியில் சிறந்த முறையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற சாதாரண வட்டி வீதமே இந்த நிறுவனத்திற்கும் வழங்கப்படுகின்றது. அதற்கான பிணை அந்த சிகரெட் தொகை. இந்த விடயம் பணிப்பாளர் சபைக்குச் சென்றது. பணிப்பாளர் சபையில் இருந்த பீ.ரத்நாயக்க என்ற பணிப்பாளருக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்த கடன் தொகையை நிராகரிப்பதற்கு அவர் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அரச வங்கி நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னிற்பதற்கு அவசியமென அவர் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, சிகரெட்டை கொள்வனவு செய்வதற்கு கடனை வழங்குவதானால் அது நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும் என அவர் வினவியுள்ளார். சிகரெட் பாவனையை குறைப்பதே அரசாங்கத்தின் திட்டம் எனவும் சிகரெட்டை கொள்வனவு செய்வதற்கு இலங்கை வங்கி தலையிடுவதனால், அது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வரியை அதிகரிப்பதனால் சிகரெட்டின் விலை அதிகரிக்கும் நிலையில் அந்த சிகரெட் தொகை டொபேக்கோ நிறுவனத்திடம் இருந்தால் அதிகரிக்கும் வரி வருமானம் அரசாங்கத்தின் வருமானமாக அமையும். எனவே, அரச வருமானம் திறைசேரிக்கு செல்வதற்கு பதிலாக தனியார் வர்த்தகர் ஒருவருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது இதன் மூலம் இடம்பெறுவதாக அவர் மூன்றாவது விடயமாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியிருந்த போதிலும் அந்த பணிப்பாளர் சபை இந்த கடன்தொகைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

என அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்