MTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க இணக்கம் 

by Staff Writer 18-01-2021 | 9:57 PM
Colombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கை, கொழும்பு மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பான ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று (18) இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் திகதி இந்த வழக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சந்துன் வித்தானகே முன்னிலையில் இலக்கம் ஆறு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்வாறு வழக்கு விசாரிக்கப்படுவதை அவர் நிராகரித்தார். அதே நாளில் இலக்கம் ஒன்று மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது தமது தரப்பிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொ​மேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வழக்கு கடந்த 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நகர்த்தல் பத்திரம் மற்றும் சத்தியக் கடதாசியை தாம் ஆட்சேபிப்பதாக வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார். குறித்த நகர்த்தல் பத்திரமும் சத்தியக்கடதாசியும் சிவில் வழக்குகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளமையால் அதனுடன் ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் நிராகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான உரிமத்தை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்குமாறு MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கமைய இடைக்கால தடை தொடர்பிலான விளக்கம் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.