by Staff Writer 18-01-2021 | 7:33 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுகாதார நடைமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறப்பதற்கு சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து சமூகத்திற்கும் சமூகத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கும் COVID - 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலாத் துறையினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்றுவந்த 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர், தற்போது எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
வெகுசன ஊடக அமைச்சில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்ட திட்டத்தினூடாக 1500 இற்கும் மேற்பட்ட உக்ரைன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர்.
இதனூடாக நாட்டுக்கு 420 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாட்டின் முதலாம் கட்ட திட்டத்தினூடாக அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்து, சுகாதார நடைமுறைகளுக்கமைவாக சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக நாட்டில் 180 ஹோட்டல்கள் தரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவை சுகாதார நடைமுறைகளுடன் கூடியவையெனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர், ட்ரவல் பபள் தொனிப்பொருளின் கீழ் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு, பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுமென சுற்றுலாத் துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது COVID - 19 தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்கள் மாத்திரமே நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்களெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.