யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு

by Staff Writer 18-01-2021 | 8:30 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்திற்குள் இருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்தியா தலையிட்டதாக 'த ஹிந்து' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. நினைவுத்தூபி அழிக்கப்பட்ட பின்னர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர், பிரதமரைச் சந்தித்ததுடன் யாழ். நினைவுத்தூபி தொடர்பிலான பிரச்சினை குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவை மேற்கோள்காட்டி 'த ஹிந்து' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும் என இந்திய உயர்ஸ்தானிகர், பிரதமரிடம் கூறியதாக வார இறுதி சண்டே டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விரைந்து செயற்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 8ஆம் திகதி இரவு அழிக்கப்பட்டது. புதிய நினைவுத் தூபியை அமைப்பதற்கு, இரண்டு தினங்களின் பின்னர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார்.