ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

by Staff Writer 17-01-2021 | 8:15 PM
Colombo (News 1st) இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழ் விசாரணைக்கு உட்படுத்துமாறு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளின் இராஜந்திர அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 40/1 தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நகர்வுகள் குறித்து எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் யுத்தத்தின் போது இடம்பெற்ற இனப்படுகொலை, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை தவறியுள்ளதாக பிரகடனம் செய்யுமாறு குறித்த கடிதத்தில் ஐநா மனித உரிமைகள்பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றி ஐக்கிய நாடுகளின் ஏனைய அமைப்புகளின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டுவருமாறு தமிழ் தேசிய கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையிடம் இலங்கையை பாரப்படுத்துமாறும் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறுகின்ற வன்முறைகளை கண்காணிப்பதற்காக ஐநா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகமொன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டதை போன்ற சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்

ஏனைய செய்திகள்