குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தைத் தவிர வேறு வழி இல்லை

1000 ரூபா சம்பள விவகாரம்: குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தைத் தவிர வேறு வழி இல்லை - நிமல் சிறிபால டி சில்வா

by Staff Writer 16-01-2021 | 2:16 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வர முடியாவிட்டால், ஊதியக் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதைக் காட்டிலும் வேறு மாற்று வழி இல்லையென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொழில் அமைச்சில் நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1105 ரூபாவை பெறுவதற்கான இறுதி முன்மொழிவை இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் சமர்ப்பித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தொழில் அமைச்சு அறிவித்தது. தற்போதைய நிலைமையில், ஊதியக் கட்டுப்பாட்டுச் சபை சட்டத்தினூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பெருந்தோட்ட நிறுவன சம்மேளனம் முன்வைத்த விடயங்களை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் நிச்சயமாக பெற்றுக்கொடுக்கப்படும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.