கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

by Staff Writer 16-01-2021 | 6:07 PM
Colombo (News 1st) கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்தது. 23 துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் கிழக்கு முனையம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையில் இன்று முற்பகல் துறைமுக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது. துறைமுகத்தை நூறு வீதம் இலங்கையே நிர்வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று கலந்துரையாடலில் பங்கேற்றன. சுமார் 2 மணித்தியாலங்களாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அமைச்சரவை நியமித்த குழு சார்பாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரும் அமைச்சரவை நியமித்த குழுவின் தலைவருமான ஜெனரல் தயா ரத்நாயக்கவும் துறைமுக அமைச்சின் செயலாளரான யூ.டி.சீ. ஜயலாலும் மாத்திரமே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமைச்சரவை நியமித்த குழுவின் தலைவர் பொறுப்பை இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரான ஜெனரல் தயா ரத்நாயக்க வகிப்பதுடன், துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் ஆறு செயலாளர்களே அந்தக் குழுவின் உறுப்பினர்களாகவுள்ளனர்.