25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி

by Staff Writer 16-01-2021 | 6:20 PM
Colombo (News 1st) மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். முதற்கட்டமாக கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு ஏனைய வகுப்புகளுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார். மேலதிக வகுப்புகள் நடைபெறும் இடத்தில் அதிகூடிய மாணவர்களின் எண்ணிக்கை நூறாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வகுப்புகளை நடத்திச் செல்வதற்கான ஆலோசனைகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும், மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களும் ஆசிரியர்களும் மாவட்டங்களிடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்ததன் பின்னர், இரண்டு வாரங்கள் கடந்தே மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.