ரஷ்யாவின் COVID தடுப்பூசிக்கு ஒளடத கூட்டுத்தாபனம் அனுமதி கோரல்

by Bella Dalima 15-01-2021 | 7:48 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் COVID தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனம், தேசிய ஔடத அதிகார சபையிடம் அவசர அனுமதி கோரியுள்ளது. ரஷ்யாவின் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஔடத கூட்டுத்தாபனம் விடுத்த கோரிக்கை புத்திஜீவிகள் குழு ஊடாக ஆராயப்படுவதாக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க தெரிவித்தார். எனினும், அதற்கு எவ்வளவு காலம் செல்லும் என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தற்போது ரஷ்யா Sputnik V என்ற தடுப்பூசியை ஆராய்ந்து வருகின்றது. எனினும், உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தடுப்பூசிக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், ஆர்ஜென்டினா, பெலாரஸ், சேர்பியா போன்ற சில நாடுகளில் மாத்திரம் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதியை பெறுவதற்காக அதனை முன்வைக்கவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை ரஷ்யா அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. ஜெர்மனியின் Pfizer and BioNTech தடுப்பூசியை மாத்திரமே தற்போதைக்கு அவசரமாக பயன்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. Oxford Astrazeneca தடுப்பூசியை இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்துள்ளன. Astrazeneca மற்றும் Pfizer and BioNTech தடுப்பூசிகளை அடுத்த மாதத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு ஏற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக COVID கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இதற்கு முன்னர் கூறியிருந்தார். எனினும், Oxford Astrazeneca தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக லலித் வீரதுங்க இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் கூறியிருந்தார். உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் Pfizer and BioNTech தடுப்பூசி கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக இந்த விடயம் தொடர்பில் வினவிய போது லலித் வீரதுங்க குறிப்பிட்டார். இதனிடையே, கொரோனா ஒழிப்பு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை இந்தியா நாளை ஆரம்பிக்கவுள்ளது. ஆரம்ப நாட்களில் மாத்திரம் சுமார் மூன்று இலட்சம் இந்தியர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.