வடக்கு, கிழக்கில் சீரற்ற வானிலையால் பலர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் வடக்கில் 1600 குடும்பங்களும் கிழக்கில் 5000 குடும்பங்களும் பாதிப்பு

by Bella Dalima 15-01-2021 | 3:19 PM
Colombo (News 1st) நாட்டின் வடக்கு, கிழக்கு மலையக பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1672 குடும்பங்களை சேர்ந்த 5358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களை சேர்ந்த 1745 பேரும் மன்னார் மாவட்டத்தில் 233 குடும்பங்களை சேர்ந்த 839 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 807 குடும்பங்களை சேர்ந்த 2600 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 174 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 5137 குடும்பங்களை சேர்ந்த 16,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 1387 குடும்பங்களை சேர்ந்த 5164 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3750 குடும்பங்களை சேர்ந்த 11,289 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் 7187 குடும்பங்களை சேர்ந்த 23,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையுடன் சில பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 372 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்திலும் கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர். இதேவேளை, இன்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கடற்பிராந்தியங்களிலும் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அதிக மழையுடனான வானிலையால் 28 பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.