கொழும்பு பங்குச்சந்தையூடாக நிதி தூய்தாக்கல் இடம்பெறுகிறதா: முன்னிலை சோசலிசக் கட்சி சந்தேகம்

by Bella Dalima 15-01-2021 | 7:31 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையூடாக இடம்பெறும் சில கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னிலை சோசலிசக் கட்சி இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தது. பங்குச்சந்தையில் இடம்பெறும் விடயங்கள் பாரிய சந்தேகங்களை தோற்றுவிப்பதான முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வரிக்கொள்கையில், பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இலாபத்தை அடிப்படையாக வைத்து அறவிடும் வரி, மூலதனத்தை அடிப்படையாக வைத்து அறவிடும் வரி ஆகியவற்றை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக புபுது ஜாகொட சுட்டிக்காட்டினார். முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இதனை செய்வதாகக் கூறினாலும், அது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அவர் கூறினார். அண்மைக்காலமாக புதிய நிறுவனங்கள் வேகமாக பங்குச்சந்தையில் பதிவு செய்யப்படுவதாகவும் சலுகையைப் பெறுவதற்காகவா அந்நிறுவனங்கள் அவ்வாறு செய்கின்றன எனும் கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கறுப்புப் பணத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா என்ற தௌிவான சந்தேகமும் எழுவதாக புபுது ஜாகொட கூறினார். எனவே, இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிதி அமைச்சு, மத்திய வங்கி, அமைச்சரவை என்பன இது தொடர்பிலான நம்பிக்கையை உறுதிப்படுத்த என அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறான செயற்பாடுகளின் பின்புலத்தில் என்ன நடைபெறுகிறது என்பதையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் கூறுமாறு அவர் வலியுறுத்தினார்.