கொழும்பில் Park and Ride பஸ் சேவை ஆரம்பம்

by Bella Dalima 15-01-2021 | 4:20 PM
Colombo (News 1st) கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், Park and Ride பஸ் சேவை ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டாவ - மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்து பஸ் சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்தல், பயணத்திற்கு செலவிடும் நேரம் மற்றும் பயணிகளின் மன உளைச்சலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காலை 6 மணி முதல் காலை 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்திலும் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை Park and Ride பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் 25 நிமிடங்களுக்கு ஒரு தடவை, Park and Ride பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த பஸ்களில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்க முடியும் என்பதுடன், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்