இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 34 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 34 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் காயம்

by Bella Dalima 15-01-2021 | 4:05 PM
Colombo (News 1st) இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுலவேசி தீவில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் சில இடிந்து வீழ்ந்துள்ளன. இதன்போது, மருத்துவமனை கட்டடம் ஒன்றும் இடிந்து வீழ்ந்துள்ளது. அங்கிருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுலவேசி தீவில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 34 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள Majene நகரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. Majene நகரில் மாத்திரம் குறைந்தது 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 637 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. மேலும், 15,000 குடும்பங்கள் வரை இடம்பெயர்ந்துள்ளர். Mamuju பகுதியை அண்மித்த இடத்தில் 26 உயிரிழப்புகள் பதிவாகியிருப்பதாக இந்தோனேசியாவின் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அங்கு சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.