பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2021 | 5:42 pm

Colombo (News 1st) பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொத்துவில் பிரதேச சபையின் தற்போதைய பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்திபன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் முதல் தடவையில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தவிசாளராகவிருந்த அப்துல் வாசித் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார்.

வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதி தவிசாளராகவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் பெ.பார்த்திபன் பதில் தவிசாளராக இன்று கடமைகளை பொறுப்பேற்கவிருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொத்துவில் பிரதேச சபையின் தலைவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களை பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு பொறுப்பளிப்பது தொடர்பிலான வர்த்தமானி இன்று வௌியானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்