கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் உப தலைவர்களிடம் கையளிப்பு

கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் உப தலைவர்களிடம் கையளிப்பு

கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் உப தலைவர்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2021 | 3:32 pm

Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தில் தலைவர்களின் அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கடமைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்கள் அந்தந்த சபைகளின் உப தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

பதியத்தலாவை பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக அதன் தலைவர் ஹேரத், பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை, பதியத்தலாவை பிரதேச சபையின் உப தலைவர் கோணபுரவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்காமம் பிரதேச சபை தலைவர் ஜமால்தீன் கபீப் ரஹ்மான் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்குரிய அதிகாரங்கள், பிரதேச சபையின் உப தலைவர் அஹமட் லெப்பை நௌஃபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஏறாவூர் பிரதேச சபையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் அதிகாரங்கள் உப தலைவர் மீரா லெப்பை ரெபுபாசத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்முனை பிரதேச சபையின் தலைவர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருடைய அதிகாரங்கள் பிரதேச சபையின் உப தலைவர் மாசிலாமணி சுந்தரலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, தம்பலகாமம் மற்றும் சேருவில ஆகிய பிரதேச சபைகளில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொத்துவில் பிரதேச சபையின் தற்போதைய பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் முதல் தடவையில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தவிசாளராகவிருந்த அப்துல் வாசித் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார்.

வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதி தவிசாளராகவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் பெ.பார்த்தீபன் பதில் தவிசாளராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொத்துவில் பிரதேச சபையின் தலைவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களை பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு பொறுப்பளிப்பது தொடர்பிலான வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை நகர சபை தலைவர் மனோதர ஆசாரிகே சமிந்த சுகத் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்குரிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் நகர சபையின் உப தலைவர் துலிப் லால் குமாரநாயக்கவிற்கு வழங்கப்படுவதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்