உள்ளூர் திரைப்படத்துறைக்கு மீண்டும் வரி நிவாரணம்

by Staff Writer 14-01-2021 | 6:31 PM
Colombo (News 1st) உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வரி நிவாரணத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் வழங்கப்பட்ட வரி நிவாரணம் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கடந்த 8 ஆம் திகதி பிரதமரை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரின் பங்குபற்றுதலில் நிதியமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கமைய, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது இறை வரி சலுகை வழங்கப்படவுள்ளது. இந்த வரி நிவாரணம் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஒப்புதலுக்கமைய செயற்படுத்தப்படும் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.