மிகப்பழமையான குகை விலங்கோவியம் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பழமையான குகை விலங்கோவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

by Bella Dalima 14-01-2021 | 5:49 PM
Colombo (News 1st) உலகின் மிகப்பழமையான குகை விலங்கோவியத்தை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகை விலங்கோவியம் சுமார் 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகும். இந்தோனேசியாவின் சுலவெசி தீவிலுள்ள Leang Tedongnge குகையொன்றிலிருந்தே இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அந்தப் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்தமைக்கான சான்றாக அமைந்துள்ளன. இவற்றில் காணப்படும் சுண்ணாம்புக் கல் படிமங்களை வைத்து, ஓவியங்கள் எத்தனை வருடங்கள் பழைமையானவை என கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இவை இதனை விட பழைமையானவையாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுலவெசி தீவில் கடந்த 70 வருடங்களில் சுமார் 300 குகைகளிலிருந்து பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 136 செ.மீ அகலமும் 54 செ.மீ உயரமும் கொண்ட இந்த ஓவியத்தில் பன்றி ஒன்றின் உருவத்தையொத்த ஓவியம் காணப்படுகிறது. அதன் பின்புறத்தில் இரண்டு கை அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்தப் படத்தில் மேலும் இரண்டு பன்றியையொத்த உருவங்கள் அழிந்து போய் காணப்படுகின்றன.