உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த தைப்பொங்கல் பண்டிகை

by Staff Writer 14-01-2021 | 2:16 PM
Colombo (News 1st) 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் நாள், தைப்பொங்கல் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப் பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது. உழைக்கும் மக்கள், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் பண்டிகை இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வாழ்கின்ற இந்துக்கள் தைப்பொங்கல் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தைப்பொங்கல் கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மட்டுப்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் COVID தொற்று நிலை காணப்படுவதால், மேலும் தொற்று பரவாதிருக்கும் வகையில் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். சமூகத்துடன் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபவதை குறைத்துக்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.